கழற்றி மாட்டும் பல் செட் முதலில் நன்றாக இருப்பது போல் இருந்தாலும் நாளடைவில் அதன் தன்மை மாறிவிடும். பல் செட் போட்டுகொண்டு சாப்பிடுவதும் பேசுவதும் சிரமமாகிவிடும். ஒரு சில நேரங்களில் அதனை கழற்றி வைத்தால் தான் நிம்மதியாக இருக்கக்கூடும். பல் செட் தரும் அசைவுகரியத்திற்கு முக்கிய காரணம் அதற்கு வாயினுள் எந்த பிடிமானமும் இல்லாமல் இருப்பது தான். இதனை தவிர்க்க நவீன சிகிச்சை முறையில் டென்டல் இம்ப்ளான்ட்கள் (Dental Implant) பொருத்தி அதன்மேல் பற்கள் கட்டலாம். இந்த சிகிச்சை முறையில் தாடை எலும்பில் பல் வேர் இருக்க வேண்டிய இடத்தில் இம்ப்ளான்ட்களை பொருத்தி அதன் மேல் பற்கள் கட்டப்படுகிறது. டென்டல் இம்ப்ளான்ட்களினால் மற்ற பற்களுக்கும், ஈறுகளுக்கும், உடலுக்கும் எந்த விதமான பக்கவிளைவுகளோ பாதிப்புகளோ இருக்காது.
எனக்கு பற்களை சுற்றி உள்ள ஈறுகளில் அடிக்கடி வலி வருகிறது. சில நேரங்களில் வலியுடன் வீக்கமும் இருக்கிறது. பற்கள் ஆடுவது போல் உணர்கிறேன். இதனை குணப்படுத்துவதற்கு வழி உண்டா?
பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதனை சுற்றி உள்ள ஈறுகளின் ஆரோக்கியம் மிக அவசியம். ஈறுகள் தான் பற்களுக்கு பிடிமானம் போல் இருக்கும். ஈறுகளின் அரோக்கியதை பொறுத்து தான் பற்களின் பலம் உள்ளது. நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இல்லையெனில் பற்களில் காறை படியும். காறை படிந்த இடத்தில் கிருமிகள் சேரும். இந்த கிருமிகள் தான் ஈறுகளை பலவீனமாக்கி விடுகின்றது. ஈறு நோய்கள் பல் சொத்தை போல வலி உண்டாக்குவதில்லை. வலி வரும் பொழுது ஈறுகள் பாதிப்பு சற்று அதிகமாகி விடும். எனவே ஈறுகளை பராமரிப்பதும் சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம். ஈறு நோயின் ஆரம்ப நிலையில் பற்களின் மேற்புறத்தை சுத்தம் செய்து சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அதையும் தாண்டி பற்கள் ஆடும் நிலையில் இருந்தால் கூட பிளாப் சர்ஜரி (Flap Surgery) என்ற சிகிச்சை முறை நல்ல பலனளிக்கும். இம்முறையில் ஈறுகளை சற்று விலக்கி அதனடியில் வேர் வரை உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய முடியும். இந்த சிகிச்சை முறையினால் ஈறுகள் ஆரோக்கியம் பெற்று பல் ஆடுவதையும் குணப்படுத்த முடியும்.

